காரைக்குடி:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காரைக்குடியில் நடைபெற்ற மாவீரன் தின மாநாட்டில் அவர் பேசியதாவது: தமிழர்களை தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. குடித்து குடித்தே குனிந்தவர்கள் இனி எப்படி தலை நிமிர போகின்றனர்.
பக்கத்தில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்து கூட்ட நெரிசலில் இறந்தால் பரவாயில்லை என்கின்றனர். மரங்கள், மாடுகள் மாநாடு என்றால் சிரிக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம், கூத்தாடியை (நடிகரை) பார்க்கப்போய் இறந்தால் ரூ.10 லட்சம்.
மீனவர்கள் கொலை செய்யப்பட்டால் ஒரு ரூபாய்கூட அறிவிப்பதில்லை. குடும்பத் தலைவிக்கு ரூ.1,000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000, தேர்தல் நெருங்குவதால் பொங்கலுக்கு வேட்டி-சேலை, ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை அறிவிக்க உள்ளனர்.
இலவசம் வாங்கும் நிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளனர். நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவோம் என்று வேறு எந்த கட்சியாவது அறிவிக்க முடியுமா? நாம் தமிழர் கட்சிதான் பெரிய கட்சி.
2026 தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. 2026 தேர்தலுக்கு பிறகு பிரபாகரன் பெயரை அனைவரையும் உச்சரிக்க வைப்பேன். இனி இன விடுதலை ஒன்றுதான் தீர்வு. இவ்வாறு அவர் பேசினார்.