பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1 லட்சம் பேர் கீதை பாராயணம் செய்யும் லட்ச கீதை பாராயண நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மங்களூரு வந்தார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் ரோடு ஷோவாக வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தங்க கதவை திறந்து கோவிலுக்குள் சென்று மத்வ சரோவரில் தீர்த்த அபிஷேகம் செய்து கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து தங்க தீர்த்த மண்டபம் வழியாக கிருஷ்ண மடத்தின் மடாதிபதி தீர்த்த சுவாமிகளை சந்தித்து தீர்த்த பிரசாதம் பெற்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி லட்ச கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கோவா புறப்பட்டு செல்கிறார்.