திருவள்ளூர்/ காஞ்சிபுரம்:
மழை குறைவால் சென்னை குடிநீர் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறது.
இதனால், சென்னை குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதில், பூண்டி ஏரியிலிருந்து கடந்த நவம்பர் 27-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் விநாடிக்கு 200 கனஅடி என வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் விநாடிக்கு 3,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இச்சூழலில், மழை குறைவால் நேற்று காலை 6 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணியளவில் விநாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டது.
பிறகு, காலை10 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது.
அதேநேரத்தில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனால், நேற்று மதியம் 3 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இதேபோல், புழல் ஏரியிலிருந்து கடந்த நவம்பர் 27-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் விநாடிக்கு நூறு கனஅடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று அதிகாலையில் விநாடிக்கு 1,500 கனஅடி என, வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், மழை குறைவால் நேற்று காலை 6 மணியளவில் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணியளவில் விநாடிக்கு 500 கன அடியாகவும், காலை 9 மணியளவில், விநாடிக்கு நூறு கனஅடியாகவும் குறைக்கப்பட்டது.
அதே நேரத்தில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று மதியம் 3 மணியளவில், புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. சோழவரம் ஏரியிலிருந்து கடந்த நவ.29-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த உபரிநீர், விநாடிக்கு 200 கனஅடி என, வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், மழை குறைவால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து, படிப்படியாக குறைந்தது.
இதனால், நேற்று மதியம் 3 மணியளவில், சோழவரம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த நவ. 29-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் விநாடிக்கு 1,200 கனஅடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீரின் அளவு, அன்று இரவு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பிறகு,அந்தளவு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை 6 மணி வரை, 2,250 கன அடியாக இருந்தது.
இந்நிலையில், மழை குறைவால் நேற்று பகலில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இச்சூழலில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து, படிப்படியாக குறைந்தது. ஆகவே, நேற்று மாலை 4 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.