சென்னை:
கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாக இருக்கிறார் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு. சமகால அரசியலை மையமாக வைத்து புதிய படமொன்று உருவாகிறது.
இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு. தற்போது ரவி மோகன் நடித்து வரும் ‘கராத்தே பாபு’ படத்தினை இயக்கி வருகிறார்.
இன்று நடைபெற்ற படப்பூஜையில் ராஜூ முருகன், ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி, பி. வாசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இப்படம் குறித்து கணேஷ் கே.பாபு, “கௌதம் ராம் கார்த்திக் தனது கேரியரில் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளார்.
சாமானியனின் அரசியல் வாழ்வை காமெடி கலந்து எடுத்துரைக்கும் இந்த படத்துக்குத் தேவையான ஆழமும் திறனும் அவரிடம் உள்ளது.
சுவாரஸ்யத்தையும் எதார்த்தத்தையும் நகைச்சுவையையும் சமநிலைப்படுத்தும் அவரின் திறமை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் ராஜூ முருகனிடம் உதவியாளராக பணிபுரிந்த தினா ராகவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.