திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 11 நாட்கள் காட்சி தரும்!!

திருவண்ணாமலை என்றாலே முதலில் பக்தர்களின நினைவுக்கு வருவது அருணாசலேஸ்வரர் கோவிலும், கார்த்திகை தீபமும்தான்.

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலில் காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

7 அடி உயரம் கொண்ட செப்புக்கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக சுமார் ஆயிரம் கிலோ நெய்யும், ஆயிரம் மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்படுகிறது.

கார்த்திகை தீபம் ஏற்றும்போது திருவண்ணாமலையில் மலை உச்சியை நோக்கி அரோகரா, அரோகரா எனக்கூறி தீபத்தை வணங்குவது இறைவனை நேரில் தரிசனம் செய்வதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.

அதே சமயம் திருவண்ணாமலையில் உள்ளவர்கள் தங்கள் வீடுகள், கடைகள், நிறுவனங்களிலும் தீபம் ஏற்றி வணங்கி மகிழ்வார்கள்.

பலர் தாங்கள் நிற்கும் இடங்களிலேயே தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்குவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஏற்றப்படும் மகா தீபமானது 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.

முதல் நாளில் திருவண்ணாமலைக்கு செல்ல இயலாத பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் தீப தரிசனம் செய்யலாம். திருவண்ணாமலை தீப ஒளியானது சுமார் 20 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.‌

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நாளை மறுநாள் (3.12.2025) மாலையில் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *