டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் – இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!!

புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார்.

அப்போது டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், “இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் உரையாடினேன்.

‘டிட்வா புயல்’ காரணமாக பரவலாக ஏற்பட்ட பேரழிவுக்காகவும் துயர்மிக்க உயிரிழப்புகளுக்காகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தேன்.

இந்த கடினமான நேரத்தில் மிகவும் நம்பகமான நண்பனாக இந்தியா இலங்கையுடனும், அந்நாட்டு மக்களுடனும் உறுதுணையாக நிற்கின்றது.

தற்போது முன்னெடுக்கப்படும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும்.

அதேவேளையில் இலங்கை முன்னெடுக்கும் மீட்சி நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைநிற்கும்” என்றார்.

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயலின் கோரத் தாண்டவம், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிட்வா புயலால் இலங்கையில் வெள்ளம் மற்றும் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கிய 390-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளன.

இச்சூழலில் இந்த பாதிப்பை பேரிடர் அவசர நிலையாக இலங்கை அரசு அறிவித்தது. அதோடு உலக நாடுகளின் உதவியையும் கோரியது.

அந்த வகையில் ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்களை மீட்பு பணிகளுக்காக இந்தியா அனுப்பி உள்ளது.

நிவாரண பொருட்களும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினரையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பி உள்ளது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *