அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ம் தேதியன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை !!

சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ம் தேதியன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22.12.2025 அன்று பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் கூடிவிட்ட நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், “இந்த அரசு ஆட்சியமைக்க எங்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியது, ஆனால் ஆட்சி முடியவிருக்கும் சூழலில் எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை,” எனக் கூறி கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்குவது, அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது, தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

மேலும்,இது வெறும் பேச்சுவார்த்தை என்றளவில் நின்றுவிடாமல், அதற்குப் பின்னர் அரசின் நிலைப்பாடு மற்றும் எடுக்கப்படவுள்ள முடிவுகள் குறித்தும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி அரசுக்கு பெரும் பலம் என்பதால் அவர்களை திருப்திப்படுத்தும் முடிவுகள் வெளியாகலாம் என்றத் தகவல்களும் நிலவுகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *