லக்னோ,
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 65 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி செலவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து ெகாண்டு அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார்.

அங்கு வாஜ்பாய், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் தலா 65 அடி உயர வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
3 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்டமான திறந்தவெளி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பிறகு, அதை பிரதமர் மோடி சுற்றி பார்த்தார்.
வாஜ்பாய், தீனதயாள் உபாத்யாயா, சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பங்களிப்பு குறித்த ஒலி-ஒளி காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாக்கிய நல்லாட்சி என்னும் மரபு, தற்போது மத்திய, மாநில அளவில் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சுதந்திரம் ெபற்ற பிறகு, ஒவ்வொரு ஆக்கப்பூர்வ சாதனைக்கும் ஒரு குடும்பத்தையே காரணமாக கூறிய மனப்பான்மை உருவாக்கப்பட்டதை நாம் மறக்கக்கூடாது.
370-வது பிரிவு (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு) என்னும் சுவரை இடித்து தகர்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக பா.ஜனதா பெருமை கொள்கிறது.
பரம ஏழைகள் குறித்து பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கண்ட கனவை நனவாக்க அரசு திட்டங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி அனைத்து ஏழைகளையும் சென்றடைய திட்டம் தீட்டினோம்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, 25 கோடி பேருக்கு மட்டுமே சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைத்தன. ஆனால் இன்று 95 கோடி பேருக்கு கிடைத்து வருகிறது.
உத்தரபிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம், பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு உலகப்புகழ் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:– சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்திய பிரதமரை நான் அன்புடன் வரவேற்கிறேன். நமது பிரதமர் 29 நாடுகளிலிருந்து மிக உயர்ந்த விருதுகளை பெற்றிருப்பது மிகுந்த பெருமைக்குரியது.
இந்த சந்தர்ப்பத்தில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி , பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் சிலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இது இந்த நாளை தேசத்திற்கு மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இன்று பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளும் கூட, அவரது நினைவைப் போற்றும் வகையில் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.
திறப்பு விழாவிற்குப் பிறகு, பிரதமர் மோடி, மற்ற தலைவர்களுடன் சேர்ந்து, வளாகத்திற்குள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
அவர், வாஜ்பாய், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட காட்சிப் பொருட்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.