சென்னை,
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே கடந்த தேர்தலில் தி.மு.க. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர்.
தற்போது ஆட்சி முடியவுள்ள தருணத்தில் இந்த வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
இதனைக் கண்டித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சென்னையில் கடந்த 26–ந்தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தியபடி, முழக்கமிட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இரண்டாவது நாளாக 27-ந்தேதி, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.
மூன்றாம் நாளாக நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் சென்னை மெரினா சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
எனினும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் மெரினா கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
போராட்டம் காரணமாக தலைமை செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.