தமிழக அரசின் 6 துறைகளின் சார்பில் ரூ.58,740 கோடியில் நடைபெறும் முத்திரைத் திட்டப்பணிகளை 2026 பிப்ரவரிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சென்னை:
தொழில், பொதுப்பணி, எரிசக்தி உள்ளிட்ட 6 துறைகளின் சார்பில் ரூ.58,740 கோடியில் நடைபெறும் முத்திரைத் திட்டப்பணிகளை 2026 பி்ப்ரவரிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் முத்திரைத் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த டிச.22-ம் தேதி 6 துறைகளைச் சேர்ந்த ரூ.87,941 கோடி மதிப்பிலான 27 முத்திரைத் திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று நடந்த கூட்டத்தில், தொழில், எரிசக்தி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் அறநிலையங்கள், கைத்தறி, பொதுப்பணித் துறை ஆகிய 6 துறை களைச் சேர்ந்த ரூ.58,740 கோடி மதிப்பில் செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

சிவகங்கை மினி டைடல் பூங்கா பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், சூலூர் பாதுகாப்பு உபகரண உற்பத்தி பூங்கா மற்றும் ஒரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்கா பணிகளை 2026 ஜனவரிக்குள்ளும், கோயம்புத்தூர் பொது பொறியியல் வசதி மையப் பணிகளை பிப்ரவரிக்குள்ளும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், எரிசக்தி துறையின் கீழ், ரூ.13,077 கோடியில் நடைபெற்று வரும் உடன்குடி அனல்மின் திட்ட (அலகு I) பணிகளை ஜனவரிக்குள் முடித்து, கோடை காலத்தில் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

சுகாதாரத் துறையின்கீழ் ரூ.110 கோடியில் நடைபெறும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைப் பணிகளை பிப்ரவரிக்குள்ளும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

இதுதவிர, நீலகிரியில் சூழல் பூங்கா அமைக்க பிப்ரவரிக்குள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என துறை செயலர் தெரிவித்தார். இதுதவிர, துறைகள் சார்பிலான பிற பணிகளையும் விரைவாக முடிக்க முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மின்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், துறை செயலர்கள் மங்கத்ராம் சர்மா, பிரதீப் யாதவ், க.மணிவாசன், ப.செந்தில்குமார், வி.அருண்ராய். வே.அமுதவல்லி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *