மகர விளக்கை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு நேற்று வரை 3 நாட்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.


ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 11 மணி வரை நெய்யபிஷேகத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சன்னிதானத்தில் கேரள போலீஸ் சார்பில் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் தலைமையில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

மகர விளக்கை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு நேற்று வரை 3 நாட்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் மனோஜ்குமார் தலைமையிலான குழுவினர் சபரிமலைக்கு வந்தனர்.

அவர்கள் சபரிமலைக்கு வரும் குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக பல்வேறு துறைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக அந்த குழுவினர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் மற்றும் தேவஸ்தான வாரிய உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் சபரிமலைக்கு வந்திருந்த சிறுவர், சிறுமிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் சன்னிதானத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விரைவாக தரிசனம் செய்யவும் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சன்னிதானத்திலும், 18-வது படியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வரிசையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அனைத்து குழந்தைகளும் அவர்களது விவரங்கள் அடங்கிய கைப்பட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணைய குழுவினர் உத்தரவிட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *