துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

கராகஸ்:
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார்.

மேலும், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டன.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட முயன்றதாக சில படகுகள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இந்த சூழ்நிலையில், வெனிசுலா தலைநகர் கராகஸில் நேற்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணி) அடுத்தடுத்து பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாயின. அதில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை அமெரிக்க சட்டஅமலாக்கத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நிக்கோலஸ், அவரது மனைவி இருவரும் நியூயார்க் நகருக்கு அமெரிக்க போர்க்கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளனர். வெனிசுலாவை அமெரிக்கா தற்காலிகமாக ஆட்சி செய்யும்.

அதன் பரந்த எண்ணெய் வளங்கள் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார். நிகோலஸ் மதுரோ மீதும் அவரது மனைவி மீதும் போதைப்பொருள் பயங்கரவாத சதி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக், நிகோலஸ் மதுரோதான் நாட்டின் அதிபர். அவர்தான் நாட்டின் ஒரே அதிபர். அவரை அமெரிக்க உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்குமாறு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-க்கு வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா, சீனா கண்டனம்: அமெரிக்காவின் இந்த செயல் ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உண்மை நிலவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுபோல, சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும், நிதானத்தை கடைபிடிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *