திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் நேற்று சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!!

திருச்சி:
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் திருச்சி வந்தார். முதல் நாள் புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அன்று இரவு திருச்சியில் உள்ள ஹோட்டலில் தங்கிய அவர், நேற்று காலைதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

திருவானைக்காவல் வடக்கு வாசல் வழியாக காலை 10 மணியளவில் கோயிலுக்கு வந்த அவருக்கு, இந்து சமய அறநிலைத் துறை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் வெள்ளிக் குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அம்மன் சந்நிதியில் உள்ள பிரசன்ன விநாயகரை வழிபட்ட அமித் ஷா, மூலவர் அகிலாண் டேஸ்வரியை தரிசனம் செய்தார்.

பின்னர், பேட்டரி கார் மூலம் மூன்றாம் பிரகாரம் வழியாக சென்று ஜம்புகேஸ்வரரை வழிபட்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவிக்கப்பட்டது.

கோயில் உதவி ஆணையர் சுரேஷ், கோயில் தலைமை அர்ச்சகர் கார்த்திகேயன், அத்தியாயன பட்டர் வாசுதேவன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். அமித் ஷா வருகையையொட்டி சுமார் 2 மணி நேரம் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

பின்னர், அங்கிருந்து ஸ்ரீரங்கம்ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற அமித் ஷாவை, கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர், தீபு பட்டர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

முதலில் தாயாரை வழிபட்ட அமித் ஷா, தொடர்ந்து சக்கரத்தாழ்வார், உடையவர், பெரிய கருடாழ்வார் மற்றும் மூலவரை தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு மாலை மரியாதையும், சால்வையும் அணிவிக்கப் பட்டு, மூலவர் ரங்கநாதர் படம் வழங்கப்பட்டது.

கும்ப மரியாதை இல்லை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு தங்கக் குடத்தில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்படு வது வழக்கம்.

ஆனால் தற்போது நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, ரங்கநாதர் காப்பு கட்டி இருப்பதால் அமித் ஷாவுக்கு தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவில்லை.

தவில், நாகஸ்வரம் உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்படவில்லை. அமித் ஷா காலை 10.55 மணிக்கு கோயிலுக்கு வந்த நிலையில் காலை 8 மணியில் இருந்து பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் அங்கிருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *