பக்தரின் குறைதீர்த்த அலவாய்மலை முருகன்!!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் அலவாய்ப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.

ஒரு காலத்தில் முருகப்பெருமான் மீது அதீத பக்தி கொண்ட பக்தர் ஒருவர், குழந்தை வரம் வேண்டி பழனி முருகனை தரிசிக்க சென்றார்.

அந்த பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அலவாய்மலையில் தான் எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கும்படியும், இந்த பணியை செய்து முடிக்கும் தருவாயில் உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் அருளினார்.

இதையடுத்து மகழ்ச்சி அடைந்த அந்த பக்தர், இத்தலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு, முருகப்பெருமான் கனவில் கூறியபடியே பக்தர்களுக்கு வசதியாக படிக்கட்டுகளை அமைத்து கொடுத்தார். இந்த திருப்பணி முடியும் வேளையில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த மலையில் கொங்கணச் சித்தர் நீண்ட காலம் தங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மலை ‘கொங்கண மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலில் முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தியபடி அழகுற காட்சி தருகிறார். இவர் சன்னிதிக்கு எதிரில் மயிலும், நந்தியும் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இங்கு வற்றாத சுனை ஒன்றும் உள்ளது.

கார்த்திகை மாதம் வரும் சோம வாரத்தில் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

கர்ப்பப்பையில் கோளாறு உள்ள பெண்கள் இத்தலம் வந்து முருகனை வழிபட்டு, பின்பு இங்குள்ள சுனை நீரை பருகினால் அவர்களின் குறை சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *