வரங்கள் அள்ளித்தரும் விநாயகர் தலங்கள்!!

திண்டுக்கல் நகரின் மத்திய பகுதியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர் கோவில் உள்ளது. எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப்பார்த்து நன்மை பெறுகிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயாகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று ‘உச்சிஷ்ட கணபதி’. ஒரு பெண்ணை அணைத்தபடி உள்ள வடிவம்தான் ‘உச்சிஷ்ட கணபதி’ வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தீவனூர் கிராமம். இங்குள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை.

திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் ‘பெருநாட்டு பிள்ளையார்.’ இந்தக் கோவில், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தான் திறந்திருக்கும்.

இந்த கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக் கண்டு தரிசித்தால் தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களும் சில மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து, கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும்.

சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்கிறார்கள்.

குழந்தை பிறந்ததும் கோவில் சன்னிதிக்கு வந்து, இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் குழந்தையை உட்புறமாகத் தந்து, வெளிப்புறமாக வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *