சென்னை:
பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகக் காளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை இன்று (ஜன.17) காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை வழங்கப்படும்.
அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என 2 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.

தொன்மைநகரமான மதுரையில் தை மாதப் பிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கும்.
தை மாதம் 1-ம் தேதி (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கும். 2-ம்நாள் மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும். 3-ம் நாள் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெறும்.
அதன்படி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராம கமிட்டி சார்பில் விழா ஏற்பாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கியது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆட்சியர் பிரவீன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கும் ரூ. 2 கோடி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசும், சிறந்த காளைகளுக்கு துணை முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசும் வழங்கப்படுகின்றன.
பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு செல்லும் வழியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட வருகை தந்தார்.
மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் வழி நெடுகிலும் திமுகவினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 11.05 மணிக்கு வருகை தந்தார்.
அவருடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எம்பிக்கள் சு.வெங்கடேசன், தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
களத்தில் நின்று களமாடிய காளையின் உரிமையாளர் திருச்சி முருகானந்தம், புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன், வெளிச்சநத்தம் போலீஸ் சத்யா ஆகியோருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.
பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “அனைவருக்கும் அன்பான வணக்கம். எல்லோருக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.
மதுரை மண் வீரம் விளைந்த மண். வீர விளையாட்டான உலகப்புகழ் பெற்ற அலங்கநல்லூர் பார்க்கும்போது நமக்கு வீரம் வருகிறது.
இதில் காளைகளை அடக்கும் காளையர்களை பார்க்கும்போது தமிழ் மண்ணுக்கே பெருமையாக இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் சங்கம் வளர்த்த மதுரையில் அறிவுக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம், தமிழர்களின் அடையாளமான வீர விளையாட்டுக்கு கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.
இப்போது ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி முதல்வராக சிலவற்றை அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும். அந்த வகையில் முக்கியமான 2 அறிவிப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்டையி்ல கால்நடை பராமரிப்புத் துறையில் பணி வழங்கப்படும்.
மேலும், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ரூ.2 கோடி மதிப்பில் சிறந்த பயிற்சி மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும். என்பதை அறிவிக்கிறன்.
இதில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே, அந்த மகிழ்ச்சியான அறிவிப்புகளை அறிவித்த மகிழ்ச்சியோடு செல்கிறேன், என்றார். பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார்.