கோவை:
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான வாத்து, கோழிகள் சில வாரங்களுக்கு முன்பு திடீரென இறந்தது. அதனை தொடர்ந்து நடத்திய சோதனையில் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள், வாத்துகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட 13 ஆயிரம் பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளா-தமிழக எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள 1200 கோழிப்பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பறவை காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பண்ணைகளில் அசாதாரண கோழி இறப்பு உள்ளதா? பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை. இங்கிருந்து தான் கோழிகள் சப்ளை செய்யப்படுகிறது.
அங்கிருந்து வரத்து இல்லை. இருப்பினும், 1200 பண்ணைகளிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உரிமையாளர்கள் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பண்ணைகள், கறிக்கடைகள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் மாதந்தோறும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் தற்போது வரை நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இருப்பினும் பண்ணைகளில் திடீரென கோழிகள் இறப்பு அதிகமாக இருந்தால் அல்லது பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை டாக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.