25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளை அதிரவிட வரும் அமர்க்களம்!!

சென்னை:
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’, படையப்பா உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

மேலும், தெறி மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் வரும் 23ம் தேதி ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அமர்க்களம்’ திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

1999-ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’, அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான 25-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அவரை ஒரு ‘மாஸ்’ ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது.


இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித்தும், நடிகை ஷாலினியும் காதலிக்கத் தொடங்கினர். பின்னாளில் இவர்கள் இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். எனவே, ரசிகர்களுக்கு இது வெறும் படம் மட்டுமல்ல, ஒரு உணர்ச்சிகரமான காவியமாகவும் பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சரண் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான இரண்டாவது வெற்றிப் படம் இது. பரத்வாஜ் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட்.


இந்நிலையில், காதலர் தின வாரத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 12ம் தேதி அன்று அமர்க்களம் வெளியாகிறது.

இத்திரைப்படம் தற்போதைய காலத்திற்கு ஏற்ப 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்புடன் வெளியாகவுள்ளது.


கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நடிகை ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு அமர்க்களம் படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *