பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

தமிழக அரசு, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஆனால் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருப்பதில்லை.

எனவே அறுவடை முடிந்த உடனேயே பயிர் காப்பீடு கிடைத்தால் தான் தொடர்ந்து நடைபெற வேண்டிய அடுத்த பருவ விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு பயன் தரும்.காப்பீடு செய்து, பயிர் இழப்பீடு ஏற்பட்டு, கணக்கெடுத்த பிறகு, பயிர் காப்பீட்டு நிறுவனம் உரிய காலத்தில் காப்பீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது நியாயமில்லை. இதனை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது சம்பா பருவத்தில் நெற்பயிர் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்காததால், பருவ மழையும் போதிய அளவுக்கு பெய்யாததால் ஏரி, குளங்களை நம்பி விவசாயம் செய்த பல்வேறு மாவட்ட விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், பயிர்கள் கருகி வீணாகிவிட்டதால் பெருத்த நஷ்டம் அடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் பயிர் காப்பீடு கிடைத் திருந்தால் அடுத்து தொடங்க வேண்டிய விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பயிர் காப்பீடு செய்தும், காப்பீடு தொகை கிடைக்காமல் அடுத்து நடைபெற வேண்டிய விவசாயத்துக்கு கடன் வாங்க தள்ளப்படுகிறார்கள்.

இப்படி தொடர்ந்து கடன் வாங்கி விவசாயம் செய்து, நஷ்டம் அடைந்து பாதிக்கப்படும் விவசாயிகள் ஏராளம்.காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு காப்பீடு தொகையை காலத்தே வழங்க வேண்டும். அதை விடுத்து காலம் தாழ்த்துவதும், 6 மாத காலம் வரை காப்பீடு தொகையை கொடுக்காமல் இருப்பதும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக தமிழக அரசு, விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, அவர்களின் இழப்பை, பாதிப்பை, கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும். அதாவது அனைத்து பருவத்திற்கும் காப்பீடு செய்ய மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதைப்போல தமிழக அரசும் அனைத்து பருவத்திற்கும் காப்பீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *