திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு மார்ச் 8-ந்தேதி அன்று நடைபெறும் – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!!

சென்னை,
‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு மார்ச் 8-ந்தேதி அன்று நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும், எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் வென்று ‘திராவிட மாடல் 2.0’ அமைந்திடும் வகையில், நமது திராவிட மாடல் அரசு பெண்களுக்கு செய்துள்ள சாதனைத்திட்டங்களை பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு தி.மு.க.வுக்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும்.

துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் 29.12.2025 அன்று மேற்கு மண்டல மகளிரணி சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிரணி மாநாடு பெற்ற மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வரும் 26–ந்தேதி அன்று டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு தஞ்சையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடுகளை அடுத்து, பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தி.மு.க. அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் தி.மு.க.வுக்கு ஆதரவை திரட்ட வேண்டும். இந்த பிரசாரம் மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக தி.மு.க.வுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • பிப்ரவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி- 28-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களை தேர்ந்தெடுத்து தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி யிலும் தலா 4 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

*தேர்தலை திறம்பட எதிர் கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டங்களை நடத்தி வெற்றிக்கான வியூகத்தை வகுத்திடுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடி யிலும் தி.மு.க.வினரால் வெற்றிக்கான வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஆகியோரை தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” – வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை 4 மண்டலங்களில் நடத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அதன்படி பிப்ரவரி-11-ந்தேதி சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம் – படப்பையிலும், பிப்ரவரி-14-ந்தேதி வடக்கு மண்டல மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21-ந்தேதி தெற்கு மண்டல மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடைபெற உள்ளது.

  • சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச் 8-ந்தேதி அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 லட்சம் தி.மு.க.வினர் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் தி.மு.க. மாநில மாநாட்டை நடத்துவது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *