சென்னை:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் நேற்று காலமானார்.
அவருக்கு வயது 87. சினிமா உலகில் உச்ச நாயகியாக கோலோச்சியவர் நடிகை சரோஜா தேவி. 1960 முதல் 1970 காலகட்டங்களில் திரை உலகில் முன்னாடி நடிகையாக திகழ்ந்த அவர், தனது 50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளால் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்ட சரோஜாதேவி, தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல விருதுகளை பெற்றுள்ளார்.
மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளையும், 2008ல் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ஒன்றிய அரசின் தேசிய விருதை பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் சரோஜா தேவிக்கு கலைமாமணி விருதும், 1997 இல் எம்ஜிஆர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கன்னடத்து பைங்கிளி கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக , தனது 87வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மல்லேஸ்வரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரோஜா தேவி அம்மையாரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்குகள் சொந்த ஊரான ராம்நகர், சென்னப் பாட்னாவின் தஷாவரா கிராமத்தில் குடும்ப சம்பிரதாயப்படி நடைபெற இருக்கிறது.
இதற்காக பெங்களூருவிலிருந்து காலை 10 மணிக்கு சரோஜா தேவியின் உடல் சென்னப்பட்னாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னப்பட்னா மற்றும் நாமநகராவில் சிறிது நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாகனம் நிறுத்தப்படுகிறது.
மேலும், சரோஜா தேவியின் உடலுக்கு முதலமைச்சர் சித்தராமைய அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக அரசு மரியாதையுடன் சரோஜா தேவி அம்மையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.