சென்னை:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 127 திட்டப் பகுதிகளில் ரூ.72.73 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகளில் தூய்மையாகப் பராமரிக்கும் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 74 குடியிருப்புப் பகுதிகளில் ரூ.15.11 கோடியில் 15,039 மீட்டர் நீளமுள்ள 37 தார்ச் சாலைகள், 11 பேவர் பிளாக் சாலைகள், 56 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 104 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்த 37 குழந்தைகள் மையங்கள், 15 நியாய விலைக் கடைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓர் அம்மா உணவகம் மற்றும் சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றில் ரூ.13.33 கோடியில் புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை மேம்படுத்த 9 பூங்காக்கள் மற்றும் 2 விளையாட்டு மைதானங்கள் ரூ.98.99 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.10.85 கோடியில் 123 குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் 1,476 விளக்கு கம்பங்கள், 9 உயர் கோபுர மின்விளக்குகள், 2,782 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் ரூ.32.45 கோடியில் 173 குடியிருப்புப் பகுதிகளில் 1,22,014 குடியிருப்புகள் பயனடையும் வகையில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1,325 தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் உள்ளனர். 406 குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.