சென்னை:
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், தெற்கு ஆசியாவின் அதிநவீன வகை சிடி ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்க மற்றும் பதிவு தொழில்நுட்ப அறிவியல் துறையில், சிறப்பான படமெடுப்பு திறனுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஜிஇ அபெக்ஸ் எலைட் 512 ஸ்பெக்ட்ரல்’ சிடி ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிடி ஸ்கேனரை, சென்னை மருத்துவக் கல்லூரியின் கதிரியக்கவியல் துறை முன்னாள் தலைவர் டி.எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் செயல்பாடு குறித்து, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் கதிரியக்கத் துறை தலைவர் வெங்கடசாய் கூறுகையில், “இந்த நவீன சிடி ஸ்கேனர் மூலம் கதிரியக்க படம் பிடித்தல், பதிவை உருவகப்படுத்துதல், காட்சியமைத்தல், நோய் அறிதல் திறனை மேம்படுத்துதல், நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், நோய்த் தன்மைக்கான விளக்கம், நோய்களுக்கு ஏற்ப தகுந்த சிகிச்சையை பரிந்துரைத்தல், ஆய்வு செய்தல் போன்றவற்றை மிக துல்லியமாக செய்து நோயாளிகளுக்கு தனித்துவமான சிகிச்சை அளிக்கலாம்.
அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்தலாம். அதேபோல், உடனடியாக கவனிக்க வேண்டிய பதிவுகளை முதன்மைப்படுத்தி நோயாளிக்கும், கதிரியக்க பணியாளர்களுக்கும் கதிர்வீச்சை குறைத்து, படத்தின் தரத்தை உயர்த்தி மருத்துவர்களுக்கு சிறந்த தகவல்களை அளிக்க முடியும்.
சவாலான கதிரியக்க பதிவுகளை ஆராய்ந்து கணிப்பதில் உள்ள சிரமங்கள் இந்த நவீன வகை இயந்திரத்தினால் களையப்படும்.
அந்த வகையில், கதிரியக்கத் துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நவீன சிடி ஸ்கேனர் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம், துணை வேந்தர் உமா சேகர், இணை துணை வேந்தர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக் கல்லூரி தலைவர் கே.பாலாஜி சிங், பதிவாளர் எஸ்.செந்தில்குமார், மருத்துவ இயக்குநர் ஆர்.பி.சுதாகர் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் பி.சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.