முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக கழகத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா!!

சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று காலை இணைந்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

இந்தச் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அமமுக இணைந்தது. இந்தக் கூட்டணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார்.

“அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சுமார் 8 ஆண்டுகால கடின உழைப்பு இதன் பின்னணியில் உள்ளது. ஆனால், மீண்டும் பழைய நிலைக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டை தலைமை எடுத்துள்ளது.

இதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பலமுறை எடுத்துச் சொல்லியும் பலன் கிடைக்காத நிலையில் நல்லாட்சி வழங்கி வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இணைத்துள்ளோம்.

திமுக எங்கள் தாய் கழகம். எதிர்வரும் தேர்தலில் அதிமுக மற்றும் அமமுக இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை” என்று மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, மாணிக்கராஜா இன்று காலை திமுகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமமுக-வின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதன் பின்னர் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாணிக்கராஜா இணைந்தார்.

அவருடன் அமமுக மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *