புதுடெல்லி:
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன.
இதற்கிடையே வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச சுற்றுப்பயணத்தை புறக்கணித்தது.
மேலும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் இந்திய வருகையும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டிருந்த வங்கதேச வீரர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் திடீரென விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வங்கதேச வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனவும், இதனால் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லமாட்டோம் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
வங்கதேச அணியின் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கோரிக்கையும் வைத்தது. ஆனால் ஐசிசி இதை நிராகரித்தது.
மேலும் வங்கதேசம் கூறுவது போன்று அந்நாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவித்தது. இதையடுத்து பல முறை வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஐசிசி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் வங்கதேச வாரியம் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தது.
இந்நிலையில் ஐசிசி நேற்று முன்தினம் ஒட்டெடுப்பு நடத்தியது. அதில், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச அணியின் கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கூடுதலாக 24 மணி நேரம் அவகாசத்தை ஐசிசி வழங்கியது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேற்று டாக்காவில் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் தலைவர் அமினுல் இஸ்லாம், தலைமை நிர்வாக அதிகாரி நிஜாமுதீன் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு பயணிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆசிப் நஸ்ருல் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறுவதற்காக வங்கதேச அணியின் வீரர்கள் கடினமாக உழைத்துள்ளார்கள்.
இந்தியாவில் விளையாடுவதால் எங்களது வீரர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழல் அப்படியேதான் தொடர்கிறது. அதனால், வங்கதேச அணி உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் விளையாடாது.
எங்களது வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரின் பாதுகாப்பையும் இந்தியா உறுதி செய்யும் என்பதில் உடன்பாடில்லை. நாங்கள் இன்னும் நம்பிக்கையை கைவிடவில்லை.
எங்களது அணி தயாராக இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட மறுக்கும் எங்களது கோரிக்கைக்கு ஐசிசியிடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வங்கதேச அணிக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றியமைக்க மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
இது அரசின் முடிவு. ஏனெனில் எங்கள் நாட்டின் குடிமக்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்கிறார்களா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்த முடிவின் பின்னணியில் உள்ள சூழலையும் அரசின் காரணத்தையும் விளக்க வீரர்களைச் சந்தித்தோம். அவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டனர்.
வங்கதேசம் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட்டை விரும்பும் நாடு. ஐ.சி.சி எங்களுக்கு இடமளிக்கத் தவறினால், அது உலக கிரிக்கெட்டுக்கும், போட்டியை நடத்தும் நாட்டுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாக இருக்கும்.
இவ்வாறு ஆசிப் நஸ்ருல் கூறினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் கூறியுள்ளதால் அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி இடம் பெறக்கூடும்.