மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தையும், 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 141-ம் நிலை வீரரான இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லியையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சின் 399-வது வெற்றியாக இது அமைந்தது. 400 வெற்றிகள் என்ற மைல்கல் சாதனையை படைக்க அவருக்கு மேற்கொண்டு ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது.
5-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 40-ம் நிலை வீரரான லாரேன்ஸோ சோனேகோவையும், 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 182-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனியையும், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-1, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் செக்குடியரசின் கோப்ரிவாவையும், 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 242-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.
16-ம் நிலை வீரரான செக்குடியரசின் ஜக்குப் மென்சிக் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 150-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் ஜோடரையும், 22-ம் நிலை வீரரான இத்தாலியின் லூசியானோ டார்டெரி 6-3, 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 36-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸையும், 30-ம் நிலை வீரரான மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட் 6-1, 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 114-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடாவையும் வீழ்த்தினர்.
139-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா சுமார் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் போராடி 4-6, 6-3, 3-6, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 21 வயதான பிரான்ஸின் ஆர்தர் ஜியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் தொடரில் 48 வருடங்களுக்கு பிறகு அதிக வயதில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பெற்றார் வாவ்ரிங்கா. அவரது வயது 40 வருடங்கள் 310 நாட்களாகும்.
இந்த வகையில் இதற்கு முன்னர் 1978-ல் ஆஸ்திரேலியாவில் ரோஸ்வால் அதிக வயதில் 3-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 44-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மரியெர்டு பவுஸ்கோவாவையும், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக்கு குடியரசின் கேத்ரினா சினியாகோவாவையும், 5-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சின் வர்வாரா கிராச்சேவையும், 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மெக்கார்ட்னி கெஸ்லரையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
24-ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டபென்கோ 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 46-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் சின்யு-யிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நடப்பு சாம்பியனான 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 62-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லின் க்ரூகரையும், 13-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லின்டா நோஸ்கோவா 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டெய்லா பிரெஸ்டோவையும், 21-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மொயுகா உச்சிஜிமாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.
யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் நிக்கோல் மெலிச்சர் ஜோடி 3-6, 1-6 (10-6) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டிம் புட்ஸ், சீனாவின் ஜாங் ஷுவாய் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.