திருவனந்தபுரம்:
கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. முதன் முறையாக கைப்பற்றியது.
அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று பா.ஜ.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருவனந்தபுரத்திற்கு வந்தார்.
அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்பு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவர் எம்.ஜி.சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை வரை ரோடு-ஷோ சென்றார்.
அப்போது அவரை சாலையிலும் இருபுறங்களிலும் திரண்டு நின்ற பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசத்தபடி ரோடு-ஷோ சென்றார். பின்பு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற ரெயில்வே விழாவில் பங்கேற்றார்.
அந்த விழாவில் நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய 3 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் என 4 புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.