கடந்த முறை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் நிகழாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படக்கூடிய பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் என பலர் மழைக்கால அவசரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நள்ளிரவில் பள்ளிக்கரணை ஏரிக்கரைப்பகுதி மற்றும் அம்பேத்கர் சாலை கால்வாய் பாலம் ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக இந்த ஆய்வின் போது பெருமழையிலும் மழை வெள்ளநீர் செல்லக்கூடிய வழித்தடங்கள் தடைபெறாமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
இதனை அடுத்து சென்னை திருவல்லிக்கேணி , சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பெசன்ட் சாலை பகுதியில் நடைபெற்று வந்த மழை நீரை அகற்றும் பணியினையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா சாலை மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னையில் அதி கனமழை பொழியும் நேரங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய அவர், நள்ளிரவில் பண்ணியாற்றிவரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, “பருவக்கால மழையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மழைக்கால அவசர பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன்.
கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்திருந்தாலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன்.
மேலும் பல இடங்களில் நீர் வற்றிவிட்டது. இருப்பினும் இதைவிட அதிக மழை வந்தாலும் மழை நீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். அந்தப் பகுதியில் வசியக்கூடிய மக்களிடமும் அவர்களது பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்துள்ளேன்.
இந்த ஆய்வு தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் கடந்த முறை மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.