சென்னை:
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் கோழிக் குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.
இதற்காக, ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலியாக தருகிறார்கள். இந்த கூலியை ரூ.20 ஆக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தில் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றி தர வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொங்கு ஈஸ்வரன், அப்துல் சமது, ஏ.கே. செல்வராஜ், அருள், ராஜேஷ் கண்ணா, ராமச்சந்திரன், நாகை மாலி பேசினர்.
இதற்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்து பேசுகையில், “இந்த விவகாரம் கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்குமான பிரச்சினையாகும்.
அவர்களே கூலி மற்ற விஷயங்களை பேசித் தீர்த்துக் கொண்டு வந்தார்கள். இதற்கும், அரசுக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை.
அதேநேரம், இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்கு சென்றதால், இதுதொடர்பாக, ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20 ஆயிரம் விவசாயிகள் 66 நிறுவனங்களுக்காக கோழி வளர்க்கிறார்கள். ஆண்டுக்கு 50 முதல் 55 கோடியளவில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன இந்த பிரச்சினை சுமூகமாக பேசி தீர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.