பாட்னா,
தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. என்று பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார்.
இவரது வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளன.2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதல்-மந்திரியாக வியூகம் அமைத்து கொடுத்தவர் இவரே.
ஏன், தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைவதற்கு அவரது தேர்தல் வியூகமே காரணம். இதற்காக, பல கோடி ரூபாயை ஊதியமாகவும் பெற்றுக்கொண்டார்.
பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், ஒரு கட்டத்தில் தேர்தல் வியூகம் வகுப்பதில் இருந்து ஒதுங்கி, சமூக ஆர்வலராக மாறி, ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் 2022-ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
கட்சியை வளர்ப்பதற்காக சொந்தமாக வியூகம் வகுத்த அவர், பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் மக்களின் ஆதரவு பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த நிலையில் உற்சாகமானார். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடும் முடிவை அவர் எடுத்தார்.
மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிட்டது. வேட்பாளர்கள் தேர்வின்போதே பார்த்து.. பார்த்து.. ஒவ்வொருவரையும் பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்தார்.
“இந்த தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்த அவர், “150 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் அது தோல்வியாகவே கருதப்படும்” என்றும் கூறினார்.
இறுதிக்கட்டத்தில், பெரும் நம்பிக்கையோடு அவர் இருந்த நேரத்தில்தான், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன.
பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சிக்கு 2 முதல் 5 தொகுதிகள் வரையே கிடைக்கும் என்றும் கூறினர்.
கருத்து கணிப்பு முடிவுகளால் வெகுண்டெழுந்த பிரசாந்த் கிஷோர், “நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. அவ்வாறு நடந்துவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகுவேன்” என்று சவால்விட்டார். ஆனால், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்பில் வெளிவந்ததுபோலவே அமைந்துவிட்டன.
பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ் கட்சிக்கு கருத்து கணிப்பில் கூறப்பட்டதுபோல ஒன்றிரண்டு தொகுதிகள் கூட கிடைக்காமல் போய்விட்டது. தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் கிங் மேக்கராக ஜொலித்த பிரசாந்த் கிஷோர், தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இந்த சூழலில் சவாலின்போது தான் அளித்த வாக்குறுதியான, அரசியலை விட்டு விலகுவதாக கூறியதை நிறைவேற்றுவாரா? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பீகார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வரும் 20-ம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மவுன விரதம் இருக்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம், ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது. இதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. முறையான மாற்றத்தை மறந்துவிடுங்கள்.
அதிகாரத்தில் கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக சில பங்கைக் கொண்டிருந்தோம்.
எங்கள் முயற்சிகளில், எங்கள் சிந்தனையில், பொதுமக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால், அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது. பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை என்பதற்கு நான் 100 சதவீத பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்.
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நவ. 20ம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மவுன விரதம் அனுசரிப்பேன்.
கடந்த மூன்று வருடங்களாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன், என் முழு பலத்தையும் செலுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை.
பீகாரை மேம்படுத்த வேண்டும் என்ற எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க முடியாது.
நிதிஷ் குமாரின் கட்சி 25 சீட்களுக்கு அதிகமாக வென்றால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என கூறியிருந்தேன். நான் இப்போது எந்த பொறுப்பில் இருக்கிறேன், விலகுவதற்கு? பீகாரை விட்டு வெளியேறுவேன் என நான் கூறவில்லை.
அரசியலில் இருந்து வெளியேறி விட்டேன் அரசியலில் ஈடுபட மாட்டேன். ஆனால், பீகார் மக்களுக்காக பேசுவதையும் நிறுத்த மாட்டேன். ” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.