ஐபிஎல் 2026 சீசனில் புது உத்வேகத்துடன் களமிறங்கவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி 3-ம் நிலையில் இறங்கி பவர் ப்ளேயில் தன் அதிரடி பலத்தைக் காட்டுவார் என்று அஸ்வின் கணித்துள்ளார்.
சஞ்சு சாம்சனை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்த பிறகே தோனி ஆட்டத்தில் இடம்பெறாத வீரராக, மெண்ட்டாராக, உத்தி வகுப்பாளராக இருப்பார் என்று பல கணிப்புகள் வெளியாக அதனைப் பொய்க்குமாறு தோனி வலைப்பயிற்சியில் கடுமையான பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
“தோனி ஆடத்தயாராகி வருகிறார். அவர் ஏற்கெனவே பயிற்சியைத் தொடங்கி விட்டார். உடற்தகுதியுடன் இருக்கிறார். சிலர் அவர் லெவனில் இருக்க மாட்டார் என்றார்கள், சிலர் இதுதான் கடைசி சீசன் என்றார்கள். ஆனால் அவரோ இம்ரான் தாஹிரைப் பார்த்து உத்வேகம் அடைந்தவராகத் தெரிவிக்கிறார்.
அவர் பயிற்சி செய்வதைப் பார்த்தால் 9-ம் நிலையில் இறங்குபவர் போல் தோன்றவில்லை. பவர் ப்ளே தாக்குதல் ஆட்ட வீரராக 3-ம் நிலையில் இறங்குபவர் போல் தெரிகிறது. அவர் பயிற்சி செய்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
சிஎஸ்கேவில் இந்த முறை பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையில் அணி திரள்கிறார்கள். ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோர் உள்ளனர். 200 ரன்களுக்குக் குறைவாக சிஎஸ்கேவை கட்டுப்படுத்துவது கடினம் என்றே தோன்றுகிறது.” என்று அஸ்வின் பில்ட்-அப் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் என்று வந்துவிட்டாலே அதன் பிரதான விளம்பரம் தோனியை முன் வைத்துத்தான். தமிழ் வர்ணனை டீம் தொடங்கி பத்திரிகைகள், ஊடகங்கள், வீரர்கள் என்று தோனி பில்ட்-அப் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். இது வழக்கம்தான்.
இதை சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை என்றாலும், இவர் கூறுவது போல் தோனி 3-ம் நிலையில் இறங்கினால் அது அவரின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே அமையும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.