ஈஷாவில் குடியரசு தின விழா!!

கோவை,
ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் சத்குரு பேசுகையில், “இந்த தேசத்தில் உண்மை மட்டுமே உயர்ந்த அதிகாரம் என்று கருதப்படும். எந்த ஒரு அதிகாரம் செலுத்தும் சக்திகளும் இங்கு உண்மை என்று ஆகிவிடாது.

உண்மை தேடுதலில்தான் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள். எனவே நாம் எப்போதும் தேடுதலில் இருப்பவர்கள் என்று அழைக்கப்பட்டோம்.

இங்கே அமர்ந்திருக்கும் இளைஞர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன.

இந்த வாய்ப்புகளை அச்சம் அல்லது பாதுகாப்பற்ற உணர்வோடு அணுகக் கூடாது. மாறாக, இந்த வாய்ப்புகளைத் திறந்த மனதோடும் துணிச்சலோடும் அணுக வேண்டும்.

இந்தியா ஒரு வல்லரசு ஆகும் என்று அனைவரும் சொல்கிறார்கள். ‘வல்லரசு’ என்பது மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் குறிக்கிறது. நாம் உலகின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை, உலகில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகிறோம்.” எனக் கூறினார்.

முன்னதாக ஈஷாவில் வழங்கப்படும் ‘அங்கமர்தனா’ எனும் யோகப்பயிற்சியை கடந்த 3 நாட்கள் ஈஷாவில் தங்கி தேஜஸ்வி சூர்யா மற்றும் அவரின் மனைவி சிவஸ்ரீ கற்றுக்கொண்டனர்.

இது குறித்து தேஜஸ்வி கூறுகையில், “சத்குரு, நீங்கள் உருவாக்கியுள்ள ஈஷா வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு இலையும் பெரும் உத்வேகத்தை சுவாசிக்கிறது. நான் ஈஷாவில் இருந்த 3 நாட்களும் எனக்கு மிகவும் தீவிரமான உத்வேகம் அளித்த நாட்களாக அமைந்தன.

இந்த நாட்டின் மாபெரும் ஞானிகள் நமக்கு வழங்கியுள்ள இந்த வற்றாத உத்வேக ஊற்றில் இருந்து, நாட்டின் மென்மேலும் பல இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *