கோவை,
கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து வண்ண பலூன்களும், சமாதானத்தை குறிக்கும் புறாக்களும் வானில் பறக்க விடப்பட்டன.
தொடர்ந்து, 8 சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் 3 மொழிப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், மத்திய அரசின் உயரிய விருதான ‘பிரதான் மந்திரி பால் புரஸ்கார்’ விருது பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீரச்சிறுமி வியோமப் பிரியா குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவித்தார்.
கடந்த 2024 மே 23 அன்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றி தன்னுயிர் இழந்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அதேபோல், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 122 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் அரசுத்துறைத் தலைமை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களாக மொத்தம் 313 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி மாணவ–மாணவியர்களின் வள்ளிக் கும்மி, கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், யோகா, கராத்தே, பரதம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், காவல்துறை தலைவர் (மேற்கு மண்டலம்) சரவணசுந்தர், காவல்துறை துணைதலைவர் சசிமோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, பொள்ளாச்சி (சார் ஆட்சியர்) ராமகிருஷ்ண சுவாமி, இணை ஆணையர் (வணிகவரித்துறை) சுபம் தாக்ரே ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) மகேஸ்வரி, (பொது) நிறைமதி, வருவாய் கோட்டாட்சியர்கள் (வடக்கு) ராம்குமார், மாருதிபிரியா (தெற்கு), மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குநர் மதுரா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, மாவட்ட தொழில் மையம் (பொது மேலாளர்) சண்முக சிவா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.