சென்னை:
சென்னை, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48), தூய்மைப் பணியாளர். இவர், தி.நகரில், வண்டிக்காரன் பகுதியில் கடந்த 11-ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த பையை எடுத்து பார்த்தார்.
அதில், 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. உடனடியாக, நகையை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த பரமேஷ் (46) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. பத்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. முதல்வர் ஸ்டாலினும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்நிலையில், சென்னை மத்திய கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் மை ஸ்டாம்பில் பத்மாவின் ஃபோட்டோவுடன் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது.
இந்தியா போஸ்ட்பேமென்ட் பேங்க் சார்பில், பிரீமியம் கணக்கு மற்றும் ரூ.15 லட்சத்தில் விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்பட்டது.
அவரது பெயரில் கால வைப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இவரை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அதிகாரி விஷ்ணுராஜ் கவுரவித்தார்.