சென்னை:
திமுக-வும் அதிமுக-வும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை இறுதிப்படுத்தி வரும் நிலையில், “இன்னும் 15 நாட்களில் கூட்டணி முடிவை அறிவிப்பேன்” என்கிறார் கிருஷ்ணசாமி. “கூட்டணி முடிவை அறிவிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது” என்கிறார் பிரேமலதா. “தை மாதத்திற்குள் எனது முடிவை அறிவிப்பேன்” என்கிறார் ஓபிஎஸ். விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்கிறது ராமதாஸ் பாமக.
பொதுவாக தேர்தல் காலம் நெருங்கியதுமே அதிமுக, திமுக என இரண்டு பெரியகட்சிகளுக்கும் சிறிய கட்சிகள் கலந்துகட்டி தங்களது ஆதரவை தெரிவிக்கும்.
திமுக-வும் அதிமுக-வும் சிறிய கட்சிகளை தேடிப்போய் பேசியதாக வரலாறு இல்லை.
மாறாக, சிறிய கட்சிகள் தான் தங்களுக்கான ‘பங்கைப்’ பெற அந்தக் கட்சிகளிடம் தவம் கிடக்கும்.
அதில் சில கட்சிகளுக்கு ‘கேட்டது’ கிடைக்கும். சில கட்சிகளுக்கு இதயத்தில் மட்டும் இடம் கிடைக்கும்.
ஜெயலலிதா காலத்தில் சிறு கட்சிகளுக்கும் கூட்டணியில் ஒரு இடமாவது கொடுத்து அவர்களை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைக்கும் வழக்கத்தை உருவாக்கினார்.
இதை திமுக-வும் பின்பற்ற ஆரம்பித்தது. ஆனால் இந்தத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ‘பெரியண்ணன்’ பாலிடிக்ஸ் மாறிப் போய் சிறு கட்சிகள் பெரிய கட்சிகளுக்கு டிமாண்ட் வைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
ஒட்டுமொத்த பாமக-வும் தன்னிடம் இருப்பதாக அன்புமணி சொன்னாலும் அவர் மட்டும் போதாது ராமதாஸ் அணியும் தங்கள் பக்கம் வரவேண்டும் என அவருடன் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் திமுக-வும், தவெக-வும் தைலாபுரத்தை வட்டமிடுவதாகச் சொல்கிறார்கள்.
சுமார் 2 சதவீத வாக்குகள் மட்டுமே வைத்திருப்பதாகச் சொல்லப்படும் தேமுதிக, இன்னமும் கூட்டணி முடிவை தெரிவிக்காத நிலையில், அந்தக் கட்சிக்கு திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளின் தரப்பிலும் ‘ஆஃபர்’ பேசி வருகிறார்கள்.
தனது ஆதரவாளர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக உருவிக் கொண்டு ஓடினாலும் ஓபிஎஸ்ஸுக்கும் இன்னும் கிராக்கி குறைந்துவிடவில்லை. அவருக்கு ஆளுநர் பதவி தருவதாக வெல்லாம் பாஜக ஆசைகாட்டுவதாக சொல்கிறார்கள்.
திமுக தரப்பில், ஓபிஎஸ் மகனுக்கு ராஜ்ய சபா சீட்டும் மூன்று தொகுதிகளும் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. ஆனாலும் இன்னும் முடிவை அறிவிக்காமல் இழுக்கிறார் பெரியவர் ஓபிஎஸ்.
தவெக-வின் வருகையும் ஆட்சியில் பங்கு என்ற அந்தக் கட்சியின் அதிரடிபிரகடனமும் இம்முறை சிறிய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தை பெரிய கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
சில நூறு வாக்குகளில் கூட வெற்றி வாய்ப்புகள் தட்டிப் போகலாம் என்பதால் சிறிய கட்சிகளின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் தங்கள் பக்கம் கொண்டுவர பெரிய கட்சிகள் பிரயத்தனப்படுகின்றன.
இதைப் புரிந்து கொண்டு சிறிய கட்சிகள் நன்றாகவே போக்குக் காட்டுகின்றன.