கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது – பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு!! முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை:
“கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை நகருக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக தனது கருத்தை முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ‘‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் ‘நோ மெட்ரோ’ என நிராகரித்துள்ளது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு.

அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜக-வை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.

கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” என்றார்.

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பா? – கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் தொகையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் 15 லட்சம் மக்களும் வசிப்பதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *