புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகளை தீர்க்க நடமாடும் அரசு அலுவலகம் ரேபரேலி மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது.
உ.பி.யின் ரேபரேலி மாவட்டத்தில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட மற்றும் நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
இவர்கள் மாற்றுத்திறனாளி சான்றிதழ், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு முக்கிய உத்தரவை ரேபரேலி மாவட்ட ஆட்சியர் ஹர்ஷிதா மாத்தூர் பிறப்பித்துள்ளார்.
இதில் அவர், மாற்றுத் திறனாளிகளின் புகார்கள் மற்றும் குறைகளைத் தீர்க்க நடமாடும் அரசு அலுவலகம் செயல்படும் என அறிவித்துள்ளார்.
அவர் தனது அறிவிப்பில், ‘‘இந்த நடமாடும் அலுவலகம் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளை மாநில ஆணையர் கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண உரிய உத்தரவுகளை பிறப்பிப்பார்.
மாவட்ட ஊராட்சி, சுகாதாரம், சாலைப் போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் நடமாடும் அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பார்கள். மாற்றுத்திறனாளிகளை மாவட்ட மருத்துவர் குழுவினர் பரிசோதித்து, மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவார்கள்.மாற்றுத்திறனாளி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான புகார்களும் இதில் விசாரிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த நடமாடும் அலுவலகம் பிப்ரவரி 2-ம் தேதி, ரேபரேலியின் ரதப்பூர் சமூக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த அவர் ஆலோசனை செய்து வருகிறார். ரேபரேலியில் அமைய இருப்பது உ.பி.யின் முதல் நடமாடும் அரசு அலுவலகம் ஆகும்.