சென்னை:
ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீஸார் கைது செய்தனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர், 10-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது.
அனுமதி மறுப்பு: இந்நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
‘இவர்கள்அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருவதால் கைது செய்ய உள்ளோம். எனவே நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும்” என சீமானிடம் போலீஸார் கூறினர்.
இதனால், காவல்துறையினருடன் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், என்னையும் இவர்களுடன் கைது செய்யுங்கள் எனக் கூறினார். இதையடுத்து போலீஸார் சீமானை கைது செய்தனர்.
விடுதலை செய்த போலீஸார்: பின்னர் சில நிமிடங்கள் கழித்து சீமானை விடுதலை செய்த போலீஸார், போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவரை இறக்கி விட்டனர். பின்னர் அங்கிருந்து தனது காரில் சீமான் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கக்கூட அனுமதி இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.