சென்னை:
வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, திருவருட்பா இசைப் பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நேற்று நடைபெற்றது.
மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 4,192 கோயில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
ரூ.8,423 கோடி மதிப்பிலான 8,106 ஏக்கர் நிலங்களை மீட்டது உட்பட அறநிலையத் துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இந்த மாநாடும் நடத்தப்படுகிறது.
தமிழ்ச் சமூகத்தில் உதித்த புரட்சியாளர் வள்ளலார். அவரது வழியில்தான், எளிய மக்களுக்கான காலை உணவு, தாயுமானவர் உட்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த மாநாட்டில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, இந்த மாநாட்டைக் குறிக்கும் விதமாக இந்தப் பள்ளி வளாகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும்.
வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, திருவருட்பா இசைப் பயிற்சி அளிக்கப்படும்.
வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளையொட்டி 3 நாட்கள் விழா நடத்தப்படும்.
அறநிலையத் துறை பதிப்பகம் மூலமாக ‘ஸ்பிரிச்சுவல் அல்-கெமி’ என்ற வள்ளலார் புத்தகம் வெளியிடப்படும்.
மருதூர், மேட்டுக்குப்பம், கருங்குழி ஆகிய இடங்களில் வள்ளலார் அன்னதானக் கூடங்கள் திறக்கப்படும்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பூங்காவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்.
அது மட்டுமின்றி, சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும். சமூகத்தில் இறுகிப் போயிருந்த பழமைவாதங்கள், மூடத்தனங்களை வள்ளலார் சாடினார்.
சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவுதான் திராவிட இயக்கத்தின் முக்கியக் கொள்கை. அவரது நோக்கங்களை மக்கள் முழுமையாக உணர்ந்து பின்பற்ற வேண்டும்.
அதற்கு இந்த மாநாடு வழிவகுக்க வேண்டும். நமது பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கின்றனர்.
வள்ளலாரின் நோக்கங்களை சிதைக்க நாம் அனுமதிக்கக் கூடாது. பிரிவினை சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் அன்பும், அறனும், கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாநாட்டில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டிய முதல்வர், பெயர் பலகையை திறந்து வைத்தார்.
வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் ரூ.12.23 கோடியில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை, பக்தர்கள் தங்குவதற்கான 3 விடுதிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சன்மார்க்கர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் ஒருபகுதியாக, சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே நடைபெற்ற சமரச சுத்தசன்மார்க்கப் பேரணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.