கொடைக்கானலில் காதலர் தினத்தை கொண்டாட குவிந்த ஜோடிகள்- ரோஜா பூ கிடைக்காமல் திண்டாட்டம்!!

கொடைக்கானல்:
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் ஜோடிகள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து காதலர்கள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்து இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

மேலும் ஏரியில் அமர்ந்து படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் தனித்தனியாக அமர்ந்து காதல் ரசம் சொட்டச்சொட்ட பேசி மகிழ்ந்தனர்.

காதலர் தினம் என்றாலே அன்பை பரிமாறிக்கொள்ள பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.

அதில் ரோஜாவுக்கு முதலிடம் உண்டு. கொடைக்கானல் மலை கிராமங்களான குண்டுபட்டி, கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

10 பூக்கள் கொண்ட ஒரு பூங்கொத்து ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று காலையில் ரூ.200க்கு விற்கப்பட்டது.

நேரம் செல்லச்செல்ல அந்த பூக்களும் விற்று தீர்ந்ததால் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் தாமதமாக வந்த காதலர்கள் தங்களுக்கு ரோஜா கிடைக்க வில்லையே என ஏமாற்றம் அடைந்தனர்.

இதைத்தவிர வேறு சில பரிசு பொருட்களையும் காதல் ஜோடிகள் வாங்கி பரிசளித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் காதல் ஜோடிகள் குவிந்து தங்கள் பொழுதை கழித்தனர்.

ஆண்டிபட்டி வைகை அணை பூங்காவில் வழக்கமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பலர் வரத்தொடங்கினர்.

காதல் ஜோடிகள் பொது இடங்களில் சுற்றினாலோ, பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்தாலோ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

இதனால் பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காதலர் தினத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு வேறு தரப்பினர் பூங்காவிற்குள் வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *