மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்; மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்!!

திருச்சி:
“மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்,” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் ரூ.31.89 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் ரூ.4.69 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா இன்று (பிப்.16) நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசியதாவது: லால்குடி நகரத்தில் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ந்து வரும் ஊர் லால்குடி தான்.

தமிழுக்காக தலைவர் கலைஞர் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த கல்லக்குடி இருப்பது லால்குடி பகுதி என்பதில் பெருமை கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு 3 அமைச்சர்களை தந்த ஊர் லால்குடி. தலைவர் கலைஞருக்கு நெருக்கமானவர் அன்பில் தர்மலிங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர் கே.என்.நேரு, எனக்கு பக்கபலமாக இருக்கும் அன்பில் மகேஸ் ஆகியோர் லால்குடியைச் சேர்ந்தவர்கள்.

இன்று நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை ஆகிய 2 முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் தந்தது லால்குடி தான்.

அவர்கள் இருவரும் திருச்சி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் முதல்வரிடம் கேட்டுப் பெறுகின்றனர். அதேபோல எம்எல்ஏ சவுந்தரபாண்டியனும் இந்தப்பகுதிக்காக பாடுபடுகிறார்.

திருச்சி பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டிய நேரு அவரது சொந்த ஊரில் பேருந்து கட்டமால் விடுவாரா? முதல்வரிடம் தெரிவித்து பேருந்து நிலையம் மட்டுமின்றி நகராட்சி அலுவலகமும் கொண்டு வந்துள்ளார்.

லால்குடி மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் பல்வேறு திட்டங்களை நடைமுப்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வந்தார்.

இந்தத்திட்டத்தை தேர்தலுக்குள் எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என சிலர் சூழ்ச்சி செய்தனர்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின், என் மக்களுக்கு நான் கொடுத்த ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால் நான் ரூ.5,000 தருவேன்’ என்று, பிப்., மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்கள் சேர்த்து ரூ.3,000 கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என ரூ.5,000 வழங்கி உள்ளார்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.2,000 உயர்த்தி தருவேன் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

முதல்வர் அளித்த வாக்குறுதியை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை உங்களிடம் உள்ளது. இன்று தமிழ்நாடு மக்கள் குறிப்பாக மகளிர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தத்திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தத்திட்டங்கள் மட்டுமின்றி லால்குடிக்கு ரூ.250 கோடியில் லால்குடி – புள்ளம்பாடியில் கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.51 கோடியில் லால்குடி அரசு மருத்துவமனைக்கு 12 அறைகள் கொண்ட புதிய கட்டிடம், ரூ.5 கோடியில் லால்குடி வட்டாட்சியர் அலுவலகம், ரூ.3 கோடியில் கால்நடை மருந்தகங்கள், ரூ.8 கோடியில் லால்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகைள் கொண்ட புதிய கட்டடம், ரூ.4 கோடியில் லால்குடி – புள்ளம்பாடி சார்பதிவாளர் புதிய அலுவலகம், தொகுதி முழுவதும் ரூ.7 கோடியில் பல்வேறு பள்ளிகளுக்கு கட்டிடம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

லால்குடி பகுதிக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்த அரசுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை சிறப்பாக, சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்க நகராட்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *