சான் பிரான்சிஸ்கோ:
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை.

இந்நிலையில், சாகேத் சடலமாக மீட்கப்பட்டதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாணவர் சாகேத் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சாகேத் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரத் நடவடிக்கைகளையும் தூதரகம் மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகேத் கடைசியாக பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் காணப்பட்டார். அவர் மாயமானதைத் தொடர்ந்து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தேடிய போது, டில்டன் பூங்கா அருகே அவரது கடவுச்சீட்டு, மடிக்கணினி அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டது.
சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரான சாகேத் படிப்பில் சிறந்து விளங்கியவர். ‘ஹைப்பர்லூப்’ தொழில் நுட்பத்திற்கான நுண்-குளிர்ச்சி அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்ற ஆறு நபர்களில் இவரும் ஒருவர்.