மெக்சிகோ ;
மெக்சிகோ நாட்டில் கடந்த 2014-ல் இகுலா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தேசிய மாளிகைக்குள் நுழைய முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதன்பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட 43 மாணவர்களும் மாயமாகினர். இந்த மாணவர்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுவரை இவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், இவர்கள் கடத்தப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர். இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் தொடர் போராட்டங்களை மாணவர் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தலைநகர் மெக்சிகோ நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அதிபர் ஆண்டிரே மேனுவல் லோபஸ் ஓப்ரடார் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இருந்தார்.
அப்போது வன்முறையில் இறங்கிய போராட்டக்காரர்கள், அரசுக்கு சொந்தமான கார் ஒன்றைக் கொண்டு அதிபர் மாளிகையின் கதவை அடித்து உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்திருப்பதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து அதிபர் லோபஸ் ஓப்ரடாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”நாங்கள் போராட்டத்தை ஒடுக்கப் போவதில்லை. மாயமான மாணவர்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.