சென்னை:
‘அரசு வழங்கும் மடிக்கணினிகளை மேற்படிப்புக்கும், வேலைக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ் 993 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: உயர்கல்வி மேம்பாட்டுக்காக ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ் புதல்வன்’, ‘உலகம் உங்கள் கையில் மடிக்கணினி திட்டம்’ என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகளவில் அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி சாதனைகள் படைத்து வருகின்றனர்.
இக்கல்லூரியில் ஏற்கெனவே, கடந்த மாதம் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும் 1,068 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் ஆண்டு இளங்கலை பயிலும் 993 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இந்தக் கல்லூரியில் அரசு திட்டங்கள் மூலம் முதல் தலைமுறை பட்டதாரிகள் 10 மாணவர்கள், ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் 262 பேர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 564 பேர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 643 மாணவர்கள் பயன்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளை மேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், கல்லூரியின் செயலாளர் சுவாமி தியானகாமியானந்தா, முதல்வர் எஸ்.குமரேசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.