வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் இரு டெஸ்டிலும் தோற்கடித்து வரலாறு படைத்தது….. அதேபோல் இந்தியாவையும் வங்கதேசம் வீழ்த்தலாம்- கவாஸ்கர்!!

மும்பை:

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதலாவது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் வங்காளதேசத்தை எளிதாக நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று இந்திய அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் இரு டெஸ்டிலும் தோற்கடித்து வரலாறு படைத்தது. இதன் மூலம் தாங்களும் தீவிரமான ஒரு அணி என்பதை நிரூபித்து காட்டியது.

இரு ஆண்டுக்கு முன்பு இந்திய அணி அங்கு சென்று விளையாடிய போது கூட வங்காளதேச அணியினர் கடும் போராட்டம் (மிர்புர் டெஸ்டில் 145 ரன் இலக்கை இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து தான் எட்டிப்பிடித்தது) அளித்தனர். தற்போது பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பதால் அதே உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.

அந்த அணியில் தரவரிசை அடிப்படையில் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதே போல் சில வளர்ந்து வரும் நட்சத்திரங்களும் உள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால் அவர்களை பற்றி எதிரணிகளுக்கு அதிகம் தெரியாது.

எனவே இப்போது அவர்களை எதிர்த்து விளையாடும் போது எந்த வகையிலும் நாம் மெத்தனமாக இருக்க கூடாது. ஏனெனில் பாகிஸ்தானை வீழ்த்தியது போல் அவர்கள் இந்தியாவையும் வீழ்த்தலாம். அதனால் இது எதிர்பார்ப்புக்குரிய ஒரு தொடராக நிச்சயம் இருக்கும்.

அடுத்த 4½ மாதங்களில் இந்திய அணி மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் (வங்காளதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) விளையாட உள்ளது. இவற்றில் குறைந்தது 5-ல் டெஸ்டில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

ஆனால் அடுத்து வரக்கூடிய எந்த டெஸ்ட் தொடரும் இந்தியாவுக்கு எளிதாக இருக்காது. விறுவிறுப்பு நிறைந்த கிரிக்கெட்டின் கோடை காலத்தில் நாம் இருக்கிறோம். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *