20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்… சூப்பர் 8 சுற்று ஆட்டம்: இந்தியா-தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்!!

அகமதாபாத்:
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.


இரவு 7 மணிக்கு கொழும்பில் நடக்கும் முதல் ஆட் டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் மோதுகின்றன.

சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.


இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மார்க்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை நாளை (22-ந் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத நடப்பு சாம்பியனான இந்தியா லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும் (மும்பை), நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும் (டெல்லி), பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும் (கொழும்பு) , நெதர்லாந்தை 17 ரன்னிலும் ( அகமதாபாத்) வீழ்த்தியது.

இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசியாக இதே மைதானத்தில் (அகமதாபாத் ) நடைபெற்ற ஆட்டத்தில் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் அந்த அணியை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவும் இந்த தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர் அலி கான் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட் ஆனார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சல்மான் ஆகா பந்துவீச்சிலும், நெதர்லாந்துக்கு எதிராக ஆர்யன் தத் பந்துவீச்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியமாகும். அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார்.

எனவே தென் ஆப்பிரிக்க அணியும் அவரை உடனடியாக வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்ஷர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி தடுமாறியே வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு எடுபடவில்லை.

இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுழற்பந்து வீரருக்கு வாய்ப்பா? அல்லது 3 வேகப்பந்து வீரரா? என்பது ஆடுகள தன்மையை பொறுத்த முடிவாகும்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்கா சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்ட் மர்க்ராம் (178 ரன்), ரிக்கெல்டன் (145), குயின்டன் டி காக் (118) ஆகியோரும் பந்துவீச்சில் நிகிடி (8 விக்கெட்), மார்கோ பயன்சென் (7 விக்கெட்), ரபடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் கனடா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி இருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடும் போராட்டத்துக்கு பிறகு 2-வது சூப்பர் ஓவரிலேயே வெல்ல முடிந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *