புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது என்றும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்த பிறகும் இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதே ஆடுகளத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த, முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது:
“டெஸ்ட் கிரிக்கெட்டையே முற்றிலும் அழித்துவிட்டார்கள். முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை போன்றுதான் பல வருடங்களாக அமைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து யாரும் பேசுவது கிடையாது. ஏனெனில் இதுபோன்ற ஆடுகளங்களில் அணி வெற்றி பெறுகிறது. யாரேனும் விக்கெட்கள் வீழ்த்துகிறார்கள். அதன் வாயிலாக அவர்கள் சிறந்தவர்களாகிறார்கள்.
எனவே எல்லோரும் எல்லாம் நன்றாக நடப்பதாக உணர்கிறார்கள். ஆனால் இந்த பழக்கம் இன்று தொடங்கியதாக நான் நினைக்கவில்லை. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இப்படி செயல்பட்டால் எந்த வகையிலும் முன்னேற முடியாது.
செக்கில் கட்டப்பட்ட எருது போன்று வட்டமடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். முற்றிலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களால் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள், ஆனால் அதனால் உண்மையான பலன் எதுவும் இல்லை.
ஒரு கிரிக்கெட் வீரராக, நீங்கள் வளர முடியாது. நிலைமையை நன்றாகப் உற்று கவனிக்க வேண்டிய நேரம் இது. பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது எப்படி என்று தெரியாமல் குழப்பமடையும் ஆடுகளங்களில் போட்டிகளை விளையாடுவது கவலைக்குரியது. இது அவர்களுக்கு அடிப்படையான பேட்டிங் திறமை இல்லாதது போன்ற தோற்றத்தை கொடுக்கும்.
திறமை காரணமாக அல்லாமல், ஆடுகளத்தின் தன்மை காரணமாகவே வீரர்கள் ஆட்டமிழக்கிறார்கள் என்றால், திறமையான பந்து வீச்சாளருக்கும் திறமையான பேட்ஸ்மேனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?
டெஸ்ட் கிரிக்கெட் இப்படி விளையாடப்படுவதை பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. நாம் ஏன் இதைச் செய்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியிருக்கும் நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி குவாஹாட்டியில் தொடங்குகிறது.