மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து குன்னூர் வரை பசுமையான காடுகள், அருவிகள், வனவிலங்குகள் நடமாட்டம், பாறையை குடைந்து உள்ளே செல்லும் குகைகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்ய உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் இந்த ரெயிலில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் கூடுதலாக மலை ரெயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் கூடுதலாக மலை ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், கேத்தியிலிருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.