கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒத்தக்கால்மண்டபம் என்னும் பகுதியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை பேருந்து நிலையம் மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. காலை 8 மணியளவில் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

இதனையடுத்து சட்டென சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் , பேருந்தை சாலையோரமாக நிறுத்தி உடனடியான பயணிகள் அனைவரையும் கிழே இறக்கிவிட்டுள்ளார்.
பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துடன் ஆகியோர் பாதுகாப்பாக இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீ பரவி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பேருந்து மளமளவென எரிந்தது. பேருந்தில் இருந்து உடனடியாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக, அதில் பயணித்த மக்கள் நிம்மதி தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த சம்பவம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.