காத்மாண்டு:
நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான கே.பி. சர்மா ஒளியை வீழ்த்தி, ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் இளம் தலைவர் பாலேந்திர ஷா பாலன் (35) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜென் இஸட் இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பதவி விலகிய கே.பி.சர்மா ஒளியை எதிர்த்து, ஜாப்பா-5 தொகுதியில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷா பாலன் போட்டியிட்டாா். ‘ராப்’ இசைக் கலைஞரான பாலேந்திர ஷா பாலன், காத்மாண்டு நகர மேயராக இளைஞர்களின் நன்மதிப்பை ஏற்கெனவே வென்றவர். விரைவில் இவர் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.
நேபாள அரசின் ஊழல் மற்றும் சமூக ஊடக தடைகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் (ஜென் இஸட்) போராட்டத்தில் குதித்தனர். இந்த ஜென் இஸட் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. அரசு கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது மொத்தம் 76 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கே.பி.சர்மா ஒளி பதவி விலகினார். இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி நியமிக்கப்பட்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கை இந்தப் போராட்டம் தொடர்பாக உயர்நிலைக் குழு விசாரணை நடத்த இடைக்கால அரசு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணை முடிந்த நிலையில், நேபாள இடைக் கால அரசிடம் அறிக்கையை விசாரணை கமிஷன் நேற்று சமர்ப்பித்துள்ளது.
சிங்தர்பார் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் வீட்டில் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.